கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நான்கு இடங்களில் ஆய்வு மையம் அமைக்கப்படுமென்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், கொரோனா குறித்து வீண் வதந்தி , தவறான செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் குறித்த வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
70 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியதில் 8 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. பாதிக்கப்பட்ட நபர் நலமுடன் உள்ளனர். கூடுதலாக தேவையான முகக் கவசங்கள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகள், அங்கன்வாடிகள் , தொழிற்சாலைகள் , பெரும் நிறுவனங்கள் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கையை சோப்பால் கழுவினால் போதும், கிருமிநாசினி கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம்.கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் அரசு சார்பில் இன்று மாலை வெளியிடப்படும். கொரோனா பாதித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரின் மனைவி மற்றும் சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. எல்லோரும் மாஸ்க் போட்ட வேண்டுமென்ற என்ற நிலை தமிழகத்தில் இல்லை.
மதுரை புறநகர் பகுதியில் கொரோனா பரிசோதனை தனி வார்டு அமைக்க முடிவு செய்துள்ளோம். அதே போல தாம்பரம் அருகே தடுப்பு மையம் சிகிச்சை மையம் அமைக்க முடிவு எடுத்துள்ளோம். மேலும் நான்கு இடங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க பரிசீலனை செய்து வருகின்றோம்.