மனித மூளையினுள் சிப்பை பொருத்தி கணினியுடன் உரையாட செய்வது தொடர்பான பரிசோதனை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.
மனிதர்களின் மூளையினுள் ஒரு சிப்பை பொருத்தி, கணினியோடு சேர்ந்து நேரடியாக உரையாடும் பரிசோதனையை விரைவாக நடத்த உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தற்போது குரங்குகளை வைத்து இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த பரிசோதனைக்கு தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதி வழங்குமாறு தங்களின் குழு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் கோரிக்கை வைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
இந்த பரிசோதனையானது நியூராலிங் என்னும் எலான் மஸ்க்கின் ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சிறு நாணயத்தின் அளவில் அந்த சிப் உள்ளது. கடந்த வருடத்தில் நியூராலிங்க் இது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் குரங்கு ஒன்றின் மூளையில் சிப் பொருத்தப்பட்டிருக்கிறது.
அதனை பயன்படுத்தி அந்த குரங்கு வீடியோ கேம் விளையாடியது. மேலும், பன்றியின் மூளையிலும் அந்த சிப் பொருத்தப்பட்டதாக நியூராலிங்க் கூறியுள்ளது. இந்த சிப் மனிதர்களின் இழந்த பார்வையை மீட்க செய்யும். எலும்பு முறிவு, முதுகுத் தண்டு, பக்கவாதத்தால் ஊனமானவர்கள் போன்றோருக்கு மறு வாழ்வு அளிக்கும்.
மூளையில் செயலிழந்த நியூரானை இந்த சிப் பணியாற்ற தூண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மூளை-இயந்திரத்திற்கு இடையேயான தொழில்நுட்பம் பற்றிய ஆய்வானது பல தசாப்தங்களாக நடக்கிறது.
அந்த வகையில் நியூராலிங்க் நிறுவனம் இந்த பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தால், சிப்பை வைத்து கணினியைக் கட்டுப்படுத்தலாம். சிப்பை பொருந்தியிருக்கும் நபர் மனதில் நினைத்தால் போதும். அதனை கணினி செயல்படுத்திவிடும்.