மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது . 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாக உள்ளநிலையில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 114 பேர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பேர் அடங்குவர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹர்தீப்சிங் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி அளித்தார். இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் எம்.பி ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் 2 அணிகள் செயல்படுவதாகவும் , உட்கட்சி பூசல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் மற்றும் 11 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை சரிகட்ட மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று போபாலில் நடைபெற உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி கவிழ்த்த பார்முலாவை மத்திய பிரதேசத்தில் பாஜக பயன்படுத்த இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.