தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர் தான் அம்மா ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது கட்சியினர் மத்தியில் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் நடந்த நிலையில் டிடிவி சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணியளவில் உயிரிழந்ததாக அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஜெயலலிதா இறந்த தினத்தை அனுசரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது டிசம்பர் 4 அல்லது 5-ல் எந்த தேதியில் இறந்த தினத்தை அனுசரிப்பது என்பது தான் குழப்பமாக இருக்கிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி ஜெயலலிதாவின் உண்மையான இறப்பு நாளான டிசம்பர் 4-ஆம் தேதி அன்று தான் மெரினாவில் நினைவஞ்சலி செலுத்துவோம் என்ற டுவிட்டரில் கூறியுள்ளார். அதோடு ஆராத ரணமாம் அம்மாவின் மரணம் என்ற தலைப்பில் ஒரு கவிதையையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் டிசம்பர் 5-ம் தேதியை நினைவு நாளாக அனுசரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அமைதி ஊர்வலத்தை நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி பெற இருக்கின்றனர். இதில் சசிகலாவின் திட்டம் என்ன என்பது மட்டும் தான் பலரது கேள்வியாக இருக்கிறது.