தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு சாப்பாடுகள் கொடுக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். அதன்பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் வேலை பார்த்து வந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 128 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதாவது கிட்டதட்ட 50 சதவீதத்திற்கும் மேல் 60 முதல் 65 வயது உடையவர்கள் தான் வேலை பார்த்து வந்துள்ளனர். இதன் காரணமாக தற்போது 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே அம்மா உணவகத்தில் வேலை பார்க்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அம்மா உணவகங்களில் 3000 பேர் மட்டுமே தேவைப்படும் நிலையில், 4300 பேர் வேலை செய்து வந்துள்ளனர். அதோடு சரியாக விற்பனையாகாத இடத்திலும் அம்மா உணவகத்தை திறந்ததோடு கட்சியில் இருப்பவர்கள் மற்றும் அதிமுகவில் வேண்டப்பட்ட வர்களுக்கு வேலை கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
அதன் பிறகு அம்மா உணவகத்தில் பொருட்கள் வாங்கும் விவகாரத்தில் வரவு மற்றும் செலவிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வரவு செலவு கணக்கு தலைவர் தனசேகரன் கூறியுள்ளார். இந்த முறைகேடுகளால் 10. 6 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதால் அதையும் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பின் அவர்கள் கட்சியினராக இருந்தாலும் கூட நீக்க மாட்டோம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.