இணையதளத்தை பயன்படுத்தி தகவல் சேகரித்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த நான்காம் தேதி அன்று தேரோட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி தலா 10 பேரிடம் 35 பவுன் நகையை மர்ம பெண்கள் திருடியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மர்ம பெண்களை வலைவீசி தேடி வந்த நிலையில்,
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த பார்வதி, லண்டனில் வசித்து வந்த செல்வி, இலங்கையில் வசித்து வந்த பராசக்தி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாங்கள் மூவரும் உறவு முறையில் அக்கா, தங்கைகள்.
இணையதளம் மூலம் இந்தியாவில் எந்தெந்த கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறது என்ற தகவலை பெற்று பின்னர் இலங்கை மற்றும் லண்டனில் உள்ளவர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து திருவிழா நடைபெறும் கோவிலுக்கு அருகாமையில் அறை எடுத்து தங்கி அங்கு இருக்கும் மக்கள் கூட்டம், சூழல் ஆகியவற்றை நோட்டமிட்டு கைவரிசையை காட்டுவோம்.
பெண்கள் என்பதால் யாருக்கும் சந்தேகம் வராது என்ற அடிப்படையில் தொடர்ந்து யாரிடமும் சிக்காமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். ஏற்கனவே புதுச்சேரி, திருப்பதி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கோயில்களில் இவர்கள் கைவரிசை காட்டி கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் இதே வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவர்களது கணவர்களும் இதற்கு உடந்தை என்பதால் அவர்களை காவல்துறையினர் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். அதேசமயத்தில் இவர்களது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை முடக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.