தர்மபுரி அருகே கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மேல் ஆண்டி பள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் முனியப்பன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் அவரது தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கிருஷ்ணாபுரம் சாலையில் மறியல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்த திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்தது. அதில் முனியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதன் காரணமாக சண்டை சச்சரவு என வாழ்க்கையே போராட்டமாக நடந்து வந்துள்ளது.
இதனால் விரக்தியடைந்த கீதா 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் பெரியோர்கள் சமாதானம் செய்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மீண்டும் அவருடன் வாழ வலியுறுத்தியதை அடுத்து முனியப்பன் வீட்டிற்கு வந்தார் கீதா.
இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்படவே ஆத்திரமடைந்த கீதா முனியப்பனை அடித்து கொன்று தோட்டத்தில் போட்டுள்ளார்.
இந்த தகவலை கேட்டதும் கீதாவின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கணவரை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.