நான்கு ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டதால் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டையில் இருக்கும் ஈ.வே.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், வேதியல், பொருளாதாரம், இயற்பியல் ஆசிரியர்கள் நான்கு பேர் அண்மையில் பணி நிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
இதற்கு மாணவிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர்கள் திடீர் இடமாற்றத்தால் தங்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள். ஆகையால் மீண்டும் ஆசிரியர்களை அங்கே நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஆனால் இதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்பை புறக்கணித்துவிட்டு பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அலுவலர்கள் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மாணவிகள் வகுப்பறைக்கு சென்றார்கள்.