கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இத்தாலியில், கொரோனா வைரஸால் 463 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக 60 மில்லியன் மக்கள் வெளியே செல்ல தடை விதித்துள்ளது இத்தாலி அரசு. நாடு முழுவதும் இருக்கின்ற அனைவரும் வேலை மற்றும் அவசரநிலைகளைத் தவிர வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தாலிய அரசாங்கம் அனைத்து பொதுக் கூட்டங்களுக்கும் தடை செய்து, கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளையும் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, மிலன் நகர் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட 25 சதவீதம் அதிகம் என்று கூறியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரசுக்கு அந்த நாட்டில் மட்டும் 3, 136 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலி மற்றும் ஈரானில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 30 பேர் இறந்துள்ளனர். உலகளவில், மொத்தம் 4,025 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,088 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாலத்தீவுகள், பல்கேரியா, கோஸ்டாரிகா, பரோயே தீவுகள், பிரெஞ்சு கயானா, மால்டா, மார்டினிக் மற்றும் மோல்டோவா குடியரசு ஆகிய 8 நாடுகளுக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரசால் ரஷ்யாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிகுறிகளுடன் உள்ளவர்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதற்காக மருத்துவ சிகிச்சை முகாமுக்கு வராதவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் குறித்து கவலை கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம், அனைத்து நாடுகளும் அதனை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும், நோய் தாக்குதலை கண்டறிவதற்கு கருவிகளை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஐரோப்பிய பங்குச் சந்தையில் 7 சதவீதமும், ஜப்பான் பங்குச் சந்தையில் 5 சதவீதமும், அமெரிக்க பங்குச் சந்தையில் 7 சதவீதமும் சரிவு ஏற்பட்டுள்ளது.