ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா தாக்காது என்று நம்பி போய் மதுக்குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இந்த வைரசால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஈரான் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. ஈரானில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
இஸ்லாமிய நாடான ஈரானில், பிற மதத்தினரும் மது குடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் , தென்மேற்கு பகுதியில் இருக்கும் குஜெஸ்தானின் (Khuzestan) மாகாணத்தில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மது அருந்துத வேண்டும் எனவும், அப்படி செய்தால் கொரோனா நோய் பாதிப்பு இருக்காது என்று அங்குள்ள சிலர் கூறியதாகத் தெரிகிறது.
இதனை உண்மை என நம்பிய பலரும் மெத்தனால் என்ற எரிசாராயத்தை வயிறு முட்ட குடித்துள்ளனர். இதையடுத்து அடுத்த சில மணிநேரங்களில், பல்வேறு உடல் உபாதைகளில் அவர்கள் பாதிக்கப்பட்டு அங்கிருக்கும் சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஆனாலும் 27 பேர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தனர். பொய்யான தகவலை நம்பி இப்படி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.