அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதியதில் பேருந்து டிரைவர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருவண்ணாமலை வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை மணிவாசகம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்குள் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த பேருந்து திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை டிரைவர் மணிவாசகம் முந்த முயன்றதாக தெரிகிறது.
அப்போது எதிரே கடலூரை நோக்கி காய்கறிகளை ஏற்றி கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் அரசு பேருந்து டிரைவர் மணிவாசகம், லாரியில் இருந்த கிளீனர் ரோஜஸ் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கம் போலீசார் உடனடியாக படுகாயமடைந்த 30 பேரை ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.