Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

சீனாவில் உண்டான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனா, இத்தாலியை தொடர்ந்து ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 237ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் மட்டும் கொரோனா தொற்றால் 7,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அவர்களை மீட்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த வாரம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் ஈரானிலிருந்து இந்தியா்களை மீட்டு வருவதற்காக இந்திய விமானப் படையைச் சோந்த ‘சி-17 குளோப்மாஸ்டா்’ போக்குவரத்து ரக விமானம் டெல்லியில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. இன்று காலை ஈரானில் இருந்து முதற்கட்டமாக 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்களை அழைத்து வந்த விமானம் டெல்லி காஜியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தரை இறங்கியது.

Categories

Tech |