உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அளவில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கடல் அலையின் வீச்சில் டர்பைன் என்ற சுழலியை சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த முறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொழில்நுட்ப கருவிகளை கண்டறிந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி தற்போது புதிய கருவியை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சரியாக ஆறு கிலோமீட்டர் தூரத்தில் கடல் பகுதிக்குள் இருபது மீட்டர் ஆழத்தில் இந்த கருவி நிறுவப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இது வேகமான கடல் அலையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றது. இந்த கருவி மூலமாக அடுத்த மூன்று வருடங்களில் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என ஐஐடி தெரிவித்துள்ளது.