கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புது மார்க்கெட் அருகே சென்ற போது 2 பேர் குடித்துவிட்டு பேருந்தில் ஏறினர். இவர்கள் டிக்கெட் எடுக்கும் போது நடத்தினரிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் குடிமகன்களை கண்டிக்க அவர்கள் கோபத்தில் அனைத்து பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதனால் பயணிகள் அனைவரும் கோபத்தில் 2 பேரையும் கீழே இறக்கி விட வேண்டும் என நடத்துனரிடம் கூறியுள்ளனர். ஆனால் பேருந்து நிற்காததால் ஆத்திரத்தில் 2 குடிமகன்களும் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினர். ஒரு கட்டத்தில் 2 பேரும் பேருந்தில் இருந்து குதிக்க முயன்ற போது அவர்களை சக பயணிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் அதற்குள் அன்னூர் பேருந்து நிறுத்தம் வந்து விட்டதால் குடிமகன்கள் இரண்டு பேரும் பேருந்தில் இருந்து இறங்கி சென்று விட்டனர். இந்த சம்பவம் பேருந்தில் இருந்தவர்களிடம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.