நளினி தன்னை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழ்நாடு அமைச்சரவை, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு பல கட்ட விசாரணைக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நளினி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.