மத்திய பிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள டம்ஜிபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதி வளாகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதியில் தங்கி படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவி ஒருவர் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விடுதியின் பெண் காப்பாளர் 5-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு முகம் முழுவதும் கருப்பு மையை பூசி பேய் போல் அலங்கரித்து செருப்பு மாலை அணிவித்து விடுதியை சுற்றிவர வைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தந்தை விடுதியில் சென்று தன் மகளை பார்த்தபோது தனக்கு நடந்த கொடுமைகளை தந்தையிடம் சிறுமி கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட பெண் விடுதிக்காப்பாளரை பணியில் இருந்து நீக்கம் செய்ததோடு, விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.