வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது படிப்படியாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் அதற்கு மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மழையின் தீவிரமானது தொடர்ந்து 3 நாட்களுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புகள் குறித்து மாநகராட்சி சார்பில் அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மின் மோட்டார்கள் தயார் நிலையில் இருப்பதோடு, 3 நாட்களுக்கு காலை, மாலை என இரு சுழற்ச்சியாக களப்பணியாளர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதன் பிறகு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உதவும் வகையில் 10 தொழிலாளர்கள் தயாராக இருப்பதோடு, 24 மணி நேரமும் மண்டல வாரியாக இருக்கும் அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இதனையடுத்து வலுவிழந்து காணப்படும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அனைத்தையும் வெட்டுவதோடு, இது தொடர்பாக மண்டல அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு மரங்களை வெட்டி அகற்றும் சக்திமான் இயந்திரம் போன்ற அனைத்து இயந்திரங் களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து மழைநீர் வடிகால்கள் முடிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் வெளியேறும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதோடு, மருந்துகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.