தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பால் விலை, சொத்து விலை, மின்கட்டண விலை போன்றவற்றின் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காலத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட். நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அவர்களுடைய கொள்கை வேறு.
எங்கள் கொள்கை வேறு. என்றைக்கும் நாங்கள் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நாட்டின் நிலைமையை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கம்யூனிஸ்டுகள் அமைதியாக இருப்பதால் நாங்கள் அவர்களுக்கு பதிலாக போராடிக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு திமுக கொடுத்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கம்யூனிஸ்ட் சகோதரர்கள் மனசாட்சியுடன் நினைத்து பார்க்க வேண்டும். போராடுவதற்கு பதிலாக கம்யூனிஸ்ட் திமுகவிற்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்கிறது.
அதிமுகவில் கடைக்கோடி தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும். ஆனால் திமுகவில் அப்படி இல்லாததால் உதயநிதியை இப்போதிருந்தே தயார் செய்து வருகிறார்கள். அதன் பிறகு கோவை செல்வராஜ் ஒரு காலாவதியான அரசியல்வாதி. தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்று சொன்ன வைத்திலிங்கம் தற்போது கட்சியில் கிடையாது. மேலும் பாஜக தலைமையில் கூட்டணி என்ற வார்த்தை அதிமுக கட்சியின் உண்மையான தொண்டர்கள் வாயில் இருந்து வராது. எங்களுக்கு யார் பின்னாலும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.