புயல் முன்னெச்சரிக்கையாக பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 620 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது நாளை நள்ளிரவு முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கையாக பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.