Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லுறாரு….. நாங்க என்ன பண்ணட்டும்…. ஸ்டாலின் பேட்டி ….!!

திமுக வெளிநடப்பு செய்ததையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

NPR  சட்டத்தை நிறைவேற்றக் கூடாது , அதை திரும்பப் பெற வேண்டும் ,  சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல நாட்களாக  வண்ணாரப்பேட்டை , மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். NPR சட்டத்தை இங்கு நிறைவேற்ற மாட்டோம் என்ற சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.

எனவே தான் இன்றைக்கு நேரம் இல்லா நேரத்தில்நாங்கள் இந்த பிரச்சினையை எழுப்பி உடனடியாக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தினோம்.  இதற்க்கு வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஏற்கனவே என்னென்ன தவறான விளக்கங்களை சொன்னாரோ அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த சட்டத்தால் எந்த மக்களுக்கு பாதிப்பு இல்லை , குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த எவருக்கும் பாதிப்பு இல்லை என்ற தவறான தகவலை சொல்கிறார். நான் என்னென்ன பாதிப்பு இருக்கிறதோ அதை விளக்கமாக சொன்னேன்.

இந்தியாவில் இருக்கக்கூடிய 13 மாநிலங்களில் முதலமைச்சர்கள் இதை கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். குறிப்பாக பாஜக  கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் இதை கடுமையாக எதிர்த்து தீர்மானம் போட்டு உள்ளார். ஆந்திர மாநிலநாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில், மாநிலங்களவையில் ஓட்டு போட்டார்கள். ஆனால் அவர்கள் மாநிலத்தில் அமுல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் தீர்மானம் போட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம்  மக்களவையில் ஆதரித்த நிலையில் மாநிலத்தில் அமுல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எனவே இந்த பிரச்சினை பற்றி பேச முடியாது என்று சில விளக்கங்களை அமைச்சர் சொல்கிறார்.கேரளா மாநிலம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டது மட்டுமல்ல நீதிமன்றத்திற்கு சென்று வழக்கும் போட்டு இருக்கிறார்கள். புதுவை மாநிலம் தீர்மானம் போட்டு உள்ளார்கள். அதேபோல மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி தொடர்ந்து எல்லா மாநிலங்களும்  எதிர்த்துக் கொண்டு இருக்கையில் நீங்கள் வண்ணாரப்பேட்டை,  மண்ணடி பகுதியில் இரவு பகல் பாராமல் பெண்கள் , குழந்தைகள் முதியவர்கள் என தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்களை அழைத்து பேசுங்கள் அவர்கள் கேட்க கூடிய சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று தொடர்ந்து நாங்கள் எடுத்துச் சொன்னோம். அதை அவர்கள் செவிமடுக்கவில்லை.  அதனால் அதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |