Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெட்ரோல் விலையை ரூ.60க்கு கீழ் குறைக்க முடியுமா பிரதமர் மோடி? – ராகுல் காந்தி கேள்வி! 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 35% குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். 

சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையிலான கச்சா எண்ணெய் போர் மற்றும் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாக சரிந்துள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்  ”இந்தியப் பிரதமரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசைக் கலைப்பதில் நீங்கள் ஓய்வில்லாமல் பணியாற்றும்போது உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததைக் கவனிக்காமல் போயிருப்பீர்கள். 

கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயனை இந்தியர்களுக்கு நீங்கள் அளிப்பீர்களா? 1 லிட்டர் பெட்ரோலின் விலையை 60 ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிப்பீர்களா? இது நிச்சயம் நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததில் அக்கட்சியின் இளம் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. 

எனினும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை தேர்தல் வருவதையொட்டி  நேற்று காங்கிரஸிலிருந்து விலகி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று பதவி விலகினர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |