‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் தேதி) நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 65 – 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து தற்போது மேலும் தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
எனவே நாளை மொத்தம் 13 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.22) மற்றும் நாளை மறுநாள் (10.12.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.