கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 56ஆக அதிகரித்தது. இன்று மட்டும் கேரளாவில் 8, டெல்லியில் மற்றும் ராஜஸ்தானில் தலா 1 என 10 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் இன்று மரணம் அடைந்தார். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருவதை அடுத்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதிகள் டி.என். படேல், சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு முறையான மற்றும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.