தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என கூறப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக்த்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை, பூங்கா பகுதிகளுக்கு தடை, பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல இன்று இரவு அரசு பேருந்துகளும் இயங்காது என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆம்னி பேருந்துக உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல இன்று இயங்கும். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து புறப்படக்கூடிய ஆம்னி பேருந்துகள், சென்னை வந்து சேரும், அதேபோல சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நெல்லை, மதுரை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ஆம்னி பேருந்துகளும், ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட பயணிகள் அந்தந்த பகுதிகளில் பேருந்துகளில் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.