தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது.
இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 65 – 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. 396 வீரர்கள் 12 குழுக்களாக 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் மதியத்திற்கு மேல் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட எந்த ஒரு மாவட்டத்திலும் இன்று இரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என போக்குவரத்து துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது. சென்னையில் புயலால் காற்றுடன் பலத்த மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தவிர்க்க முடியாத அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் சென்னை உள்ளிட்ட எந்த மாவட்டத்திலும் இன்று இரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என்றும் புயல் பாதிப்பு இருக்கும் இடங்களில் மட்டும் அந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் என்றும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. மலை பாதிப்பு அதிகம் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் மட்டும் பேருந்துகள் இன்று இரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.