வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த சில மணி நேரத்திற்குள் இது நிறைவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்யும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புயலால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்று பிற்பகலுக்குள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்து விடும். புயலால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சில நாட்களில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இன்று மாலைக்குள் இயல்புநிலை திரும்பிவிடும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.