கேரளாவை சேர்ந்த 30 வயது ஆண் மற்றும் 28 வயது பெண் இருவரும் சென்ற ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் கணவன்-மனைவி இருவரும் விவாரத்து செய்துகொள்ள முடிவெடுத்து மே மாதம் குடும்ப நீதிமன்றத்தில் ஒன்றாக விவாகரத்து மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தினருக்கான விவாகரத்து சட்டப் பிரிவு 10ஏ படி, திருமணமாகி ஓராண்டுக்கு பிறகுதான் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அப்போதுதான் விவாகரத்து விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறி அந்த மனுவை குடும்ப நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதனை மறுத்து இரண்டு பேரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
இம்மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட்டு, இரண்டு பேரின் சம்மதம் இருந்த போதும் விவாகரத்து பெற ஓராண்டு நிறைவாகி இருக்கவேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்தது. அத்துடன் திருமண பிரச்சனையில் கணவன்-மனைவியின் நலனை மேம்படுத்த இந்தியாவில் பொதுவான திருமண சட்டத்தை கொண்டு வருவது பற்றி மத்திய அரசு கருத்தில் கொள்ளவேண்டும் என கோர்ட்டு தெரிவித்தது. அதுமட்டுமின்றி இவ்வழக்கில் தொடர்புடைய மனுதார்கள் குடும்ப நீதிமன்றத்தை அனுகி விவாகரத்து வழக்கை நடத்தலாம் எனவும் அனுமதி அளித்துள்ளது.