மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயலால் மொத்தம் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் 40 இயந்திர படகுகள், 160 வலைகள், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 10,734 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் நாளை வீடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.