கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் வரும் 31ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 56ஆக அதிகரித்தது. இன்று மட்டும் கேரளாவில் 8, டெல்லியில் மற்றும் ராஜஸ்தானில் தலா 1 என 10 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் நேற்று மரணம் அடைந்தார். ஆனால் அவருக்கு ரத்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருவதை அடுத்து கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் வரும் 31ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனேவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. காஷ்மீரில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.