சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தாக்குதலில் இத்தாலியில் ஒரே நாளில் 196 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் இத்தாலியில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 830ஆக அதிகரித்துவிட்டது. கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 50 முதல் 60 வயது உடையவர்கள்.
வைரஸ் தீவிரமாகி பரவி வருவதால் இத்தாலியின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற வர்த்தக அங்காடிகள் அனைத்தையும் மூட இத்தாலிப் பிரதமர் கியூசபே காண்டே உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பெரும்பாலான பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் மருத்துவம் உதவி மற்றும் முக்கிய பணிகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற இத்தாலி அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மேலும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.