Categories
உலக செய்திகள்

கொரோனா தீவிர தொற்றுநோய்… உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆகவும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176லிருந்து 1,26,139 ஆகவும் உயர்ந்துள்ளது.

சீனாவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. இது குறித்து சுவிஸ்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், கொரோனா வைரஸ் ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் ஒரு நோயாகும்.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் முன்று மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களிலும், வாரங்களிலும் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை உச்சத்தை தொடலாம். எனவே அவசர மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவுவதன் போக்கை மாற்றுமாறு அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Categories

Tech |