Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவில் சுற்றுலா விசா ரத்து; வெளிநாட்டு கப்பல்களுக்கும் தடை!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். கேரளா – 17, மகாராஷ்டிரா-11, உ.பி.-10 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 6, கர்நாடகா – 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் -3, ராஜஸ்தான் -1 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 1, தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 1, பஞ்சாப் -1, ஹரியானா – (வெளிநாட்டினர் -14) என மொத்தம் 73 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. இதனால் இந்த வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்காமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. டெல்லி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தில் இன்று நள்ளிரவு முதல் அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் புதிய நடவடிக்கை அமலுக்கு வர உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு மாதத்துக்கு விசா வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் அனைத்து துறைமுகங்களிலும் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழையவும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. மிக அத்தியாவசியக் காரணத்துக்காக இந்தியா வர வேண்டிய நிலையில் அருகில் இருக்கும் இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |