இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக டி 20 போட்டியாக மாற்றப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி மதியம் 1: 30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக ஈரப்பதம் இருப்பதால் டாஸ் போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி மாலை 6: 30 மணிக்கு நடைபெறும் எனவும், 50 ஓவர் போட்டி 30 ஓவர் குறைக்கப்பட்டு 20 ஓவராக மாற்றப்பட்டுள்ளது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இப்போட்டியில் காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் அதிரடி புயல் ஹர்திக் பாண்டியா களமிறங்கி விளையாடுகிறார். அதேபோல துவக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவும் கூடுதல் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் குயிண்டன் டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் இளம் வீரர்கள் பலர் இடம் பெற்றிருக்கின்றனர். முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்து மிரள வைத்திருக்கிறது தென் ஆப்ரிக்க அணி. அதனால் தன்னம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்கும் என்பதால் இந்திய அணிக்கும் சவாலாக பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் பாப் டூ பிளசிஸ், ஹெய்ன்ரிச் கிளாஸன், கைல் வெர்ரைன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதேபோல் பெலுக்வாயோ, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டுவதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. டி 20 போட்டியாக மாற்றப்பட்டுள்ளதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
The cut-off time for a 20-over match is 6:30pm IST#INDvSA pic.twitter.com/4pPKJsmRBW
— BCCI (@BCCI) March 12, 2020