முதல்வரின் வாகனத்தில் சென்றதற்கு மேயர் விளக்கம் அளித்துள்ளார்.
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்கள் சேதம் அடைந்தது. அதேபோல் சென்னையில் சேதம் அடைந்த காசிமேடு மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளை நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகிய இருவரும் முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் இந்த செயலை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து மேயர் பிரியா கூறியதாவது, “முதல்வர் ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நான் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முதல்வர் செல்வதற்கு முன்பாகவே சென்று ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்.
அந்த 2 இடங்களுக்கும் உள்ள தொலைவு அதிகம். ஆனாலும் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக முதல்வரின் வாகனம் வந்தது. அதனால் அதில் ஏறி சென்றோம். மேலும் அவ்வாறு முதல்வர் வாகனத்தில் செல்லுமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. இது இந்த அளவுக்கு சர்ச்சையாகும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் மேயர் ஒரு பெண்ணாக கன்வாய் வாகனத்தில் தொங்கி சென்றதை ஒரு துணிச்சலான செயலாக நாம் அனைவரும் பார்க்க வேண்டும் என பிரபல அமைச்சர் கூறியுள்ளார்.