நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பெண் மனு ஒன்றை அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பொன்னாக்குடி பகுதியில் ஏஞ்சல் மரியபாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருந்ததாவது,”எனக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு மும்பு உறவினர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தற்போது எங்களுக்கு அபிஷா, அஜித்தா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் எனது கணவர் முத்துக்குமார் தினமும் குடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கி வருமாறு பலமுறை என்னை துன்புறுத்தினார். இதனால் நான் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பின்னர் என்னை அவரின் குடும்பத்தினர் சமாதானம் சொல்லி அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் திருந்தவில்லை. இதனால் நான் எனது தாய் வீட்டிற்கு திரும்பி விட்டேன்.
பின்னர் நான் எனது தாய் வீட்டில் திருமணத்தின்போது கொடுத்த 12 பவுன் நகையை திரும்ப கேட்டேன். ஆனால் அவர்கள் அதை தர மறுத்து விட்டார்கள். மேலும் இது குறித்து நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எனக்கும் எனது 2 குழந்தைகளுக்கும் மாதம் 9 ஆயிரம் ரூபாய் முத்துக்குமார் தரவேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அவர் பணம் தரவில்லை. தற்போது அன்பு செல்வி உள்ளிட்ட 2 பெண்களை திருமணம் செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். எனவே முத்துக்குமார் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அவரின் தந்தை தமிழரசன், தாயார் சாரதா, தங்கை நித்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறியுள்ளார். மேலும் இந்த மனுவுடன் ஆதாரங்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.