வன்முறைக்கு காரணமானவர்களை குறி வைத்துள்ளதாக ஜெர்மனி நாட்டில் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி ஒரு பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை போலீசார் கைது செய்தனர். அதில் சிலருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் ஜெர்மன் அமைச்சர் அன்னலெனா பேர்பாக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, “மரண தண்டனைகள் என்பது மக்களை அச்சுறுத்தும் முயற்சியாகும். மேலும் தங்கள் கருத்துக்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்வதற்காகவும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவும் போராடும் மக்களை மரண தண்டனை என்ற பெயரில் அச்சுறுத்துகிறார்கள். மேலும் அப்பாவி மக்களுக்கு எதிரான இந்த வன்முறைக்கு காரணமான மற்றும் மரண தண்டனைகளுக்கு பொறுப்பானவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.