மத வித்தியாசமின்றி டெல்லியில் கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது.
கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது இந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து அமித்ஷா இரண்டாவது நாளாக நாடாளுமற்றதில் விளக்கம் அளித்து வருகிறார். இன்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமித்ஷா, போராட அனைவருக்கும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார். மேலும் வட கிழக்கு டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் என 1922 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
வன்முறை குறித்து விசாரிக்க மேலும் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் சேதங்களுக்கு வன்முறையாளர்களே பொறுப்பு என்றும் அமித்ஷா மாநிலங்களவையில் தகவல் அளித்துள்ளார். மத வித்தியாசமின்றி கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன்பு அனைவரும் கொண்டு வரப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.