அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கிருஷ்ணமூர்த்தி(47) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். கண்டக்டராக பிரகாஷ்(44) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலைதடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் 21 பயணிகள் காயம் அடைந்தனர். அதில் படுகாயமடைந்த 15 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.