கஜ பூஜைக்கு என அனுமதி பெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா ? என்கின்ற RTI மூலம் வெளியான தகவல்கள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், பத்திரபதிவு துறை அமைச்சருமான மூர்த்தி அவர்களுடைய மூத்த மகன் திருமணம் மிகப் பிரமாண்டமாக மதுரையில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் உட்பட மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையிலே திருமண விழாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், திருமண விழாவில் வருகை தந்தவர்களை வரவேற்கும் விதமாக கேரளாவில் இருந்து இரண்டு ஆண் யானைகள் வரவழைக்கப்பட்டு, நுழைவு வாயில் முழுவதுமாக கரும்பு மற்றும் வாழையால் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்ட நிலையிலே,
தனியார் விழாக்களில் யானைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சரின் மகன் திருமண விழாவிற்கு யானையை எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்று, சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளிலே அவ்வாறான அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என வனத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று மதுரை மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை வளர்ப்பு யானைகள் ஏதேனும் கொண்டுவரப்பட்டதா ? என்கின்ற கேள்விக்கும் கேரள மாநிலத்தில் இருந்து மதுரைக்கு இரண்டு யானைகள் கஜ பூஜைக்காக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக பார்த்தோம் ஆனால், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திருமண விழாவில் பங்கேற்ற யானைகள் குறித்த கேள்விக்கு RTIயில் பதில் அளித்திருக்கிறார்கள். இந்த நிலையில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களை வரவேற்பதற்காக கஜ பூஜை என்ற பெயரில் கேரளாவில் இருந்து யானைகள் அழைத்துவரப்பட்டதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், கஜ பூஜை என்ற பெயரில் கேரளா வனத்துறையை ஏமாற்றி, இரண்டு யானைகள் தமிழகத்திற்கு அழைத்து வந்து சட்டவிரோதமாக திருமண விழாவில் பயன்படுத்தப்பட்டதா ?
கேரளா அரசை மட்டுமல்லாமல், தமிழக அரசையும் ஏமாற்றி கஜ பூஜைக்காக கொண்டுவரப்பட்ட யானைகள் எங்கே சென்றது ? என்ற பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ள நிலையிலே, 20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட திருமணம், கோடி கோடியாய் பணத்தை செலவழித்த சர்சை அமைச்சர் மீது எழுந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.