தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் உதயநிதி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், தற்போது புதிய கேள்வி ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், அதன் மூலம் படங்களை தயாரிப்பதோடு பெரிய நடிகர்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக தமிழகத்தில் விநியோகமும் செய்து வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் என்பது பெரிய பொறுப்பு என்பதால் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் என்ற பொறுப்பையும் துறப்பாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் சிலர் நாளை ஆட்சி மாறினால் கண்டிப்பாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் உதயநிதிக்கு தேவைப்படும் என்பதால் அந்த நிறுவனத்தை அவர் தொடர்ந்து நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால் சிலர் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் காலத்திலாவது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பொறுப்பை துறந்து தான் ஆக வேண்டும் என்கிறார்கள். மேலும் இது தொடர்பாக உதயநிதி என்னை முடிவு எடுக்கப் போகிறார் என்பது தான் தற்போது பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.