துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கித்தவித்த நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் காப்பாற்றும் காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தியர்பாகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் நடந்துள்ளது. எனிஸ் டேய்லன் (Enes taylan) என்ற அந்த 10 வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய்க்குட்டியின் சத்தத்தைக் கேட்டு நின்றுள்ளான். பின்னர் அந்த சிறுவன் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றி அங்கும் இங்கும் பார்த்தான். பின்னர் அருகில் இருந்த எண்ணெய்க் கிணற்றில் எட்டிப் பார்த்த போது தான் அங்கு நாய்க்குட்டி எண்ணெயில் சிக்கி தவித்து கத்தி கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து எனிஸ், மற்ற நண்பர்களின் உதவியுடன் தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை எண்ணெய் தொட்டியில் இருந்து பத்திரமாக மீட்டு, அருகில் இருந்த குளத்திற்குச் சென்று நாய் குட்டியின் மேல் இருந்த எண்ணெய் பிசுபிசுப்பை தனது கைகளால் சுத்தம் செய்தான். சுத்தம் செய்தபின் அந்த நாய்க்குட்டிக்கு அவன் சாப்பிடுவதற்கு உணவும் கொடுத்தான்.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தைரியமாக தலைகீழாக தொங்கி வாயில்லா ஜீவனான நாய்க்குட்டியை காப்பாற்றிய அந்த சிறுவனை சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். வாயில்லா ஜீவன்களை பார்த்தாலே அடித்து துரத்தும் மிருகங்களுக்கு மத்தியில் சிறுவனின் இரக்கமுள்ள செயல் மனதை கவருகிறது.
Dramatic footage captures the moment a 10-year-old boy rescued a puppy that got stuck in an oil well in Turkey. https://t.co/JjeB9aZ0Cb pic.twitter.com/Nt9SLppfvs
— ABC News (@ABC) March 13, 2020