வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது..
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 1: 2 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இருக்கும் ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல் ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களிலும் அவுட் ஆகினர். அதன் பின் வந்த விராட் கோலி ஒரு ரன்னில் அவுட்டானார். இதையடுத்து புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் கைகோர்த்து சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ரிசப் பண்ட் 46 ரன்னில் அவுட் ஆனார்.
அதன்பின் புஜாராவுடன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 90 ரன்களிலும், அக்சர் படேல் 14 ரன்னிலும் அவுட் ஆகினர்.ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி நேற்று முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்ற நிலையில் ஷ்ரேயஸ் ஐயருடன் அஸ்வின் ஜோடி சேர்ந்து ஆடினார். தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். இந்திய அணி 293 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது. அதன்பின் அஸ்வின் மற்றும் குல்திப் யாதவ் ஜோடி பொறுமையாக சிறப்பாக ஆடியது.
அரை சதம் அடித்த அஸ்வின் 58 ரன்களிலும், குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அதன் பின் முகமது சிராஜ் 4 ரன்னில் அவுட் ஆக, உமேஷ் யாதவ் 15 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். முடிவில் இந்திய அணி 133.5 ஓவரில் 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.. தற்போது வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கி 10 ஓவரில் 37/2 என ஆடி வருகிறது.