அமெரிக்காவில் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும் நிலை இருப்பதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது கொரோனா. அதில் வல்லரசு நாடான அமெரிக்காவும் அடக்கம். அமெரிக்காவில் இதுவரை 46 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி இறந்துள்ளனர். மேலும் 1600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதிநிதிகள் சபையில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொரோனா வைரஸ் தடுப்புக் குழு கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரசிதா டிலேப் (rashida tlaib), அமெரிக்காவில் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும் நிலை இருப்பதாக தகவல் அளித்தார்.
மேலும் அவர் , அமெரிக்க நாடாளுமன்ற மருத்துவர் பிரையன் மோனஹான் இந்த மதிப்பீடுகளை இரண்டு வகையிலான அடிப்படைகளை வைத்து அளித்திருப்பதாகவும், மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நாடு தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் ரசிதா டிலேப் கூறினார்.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 கோடி ஆகும். ரசிதா டிலேப்பின் மதிப்பீடுகளின்படி, சுமார் 46 சதவீத மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.