Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ODI rankings : அதிரடி இரட்டை சதம்..! 117 இடங்கள் முன்னேறி…. 37 ஆவது இடம்பிடித்த இஷான் கிஷன்..!!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார் இந்திய வீரர் இஷான் கிஷன்..

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில்  இஷான் கிஷனின் இரட்டை சதம் (210) மற்றும் விராட் கோலி (113) சதத்தால் 409 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய வங்கதேச அணி 34 ஓவரில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப் போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் 131 பந்துகளில் 10 சிக்ஸர், 24 பவுண்டரி உட்பட அதிரடியாக 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதாவது, குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெய்ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், 126 பந்துகளில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி முறியடித்துள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் வங்கதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசியதால் அதிரடியாக 117 இடங்கள் முன்னேறி ராக்கெட் வேகத்தில் 37வது இடத்தை பிடித்துள்ளார் இஷான் கிஷன். அதே நேரத்தில் இந்த போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

Categories

Tech |