செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்ததும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சந்திரா, சரவண கார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா போன்றோர் எங்களது வார்டு பிரச்சனையை கேட்காமல் தலைவா் கூட்டத்தை எப்படி முடித்துவிட்டு செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதன்பின் 11-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கிதுரை பாண்டியன் என் வார்டில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என கூறி நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்மன்ற தலைவரின் போக்கை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இசக்கிதுரை பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் இசக்கிதுரை பாண்டியன் வார்டு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா். இதன் காரணமாக சுமார் 1 மணிநேரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.