ஆவின் நிறுவனமானது பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அவர்களுடைய நலனுக்காகவும் பால் ஆலையை சுற்றியுள்ள கிராம விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து அதை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது. இந்த பால் விலையானது தனியார் பால் பாக்கெட் விலையை காட்டிலும் குறைவானது. இதைத் தவிர பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளையும் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் வர விருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி லாப நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் பொதுமக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குறைவான விலையில், நிறைவான தரத்துடன் கூடிய கேக் வகைகளை ஆவின் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பிளம் கேக், டெத் பை சாக்லேட் கேக், ரெட் வெல்வெட் கேக், பிளாக்கரண்ட் கேக், ரெயின்போ கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ஒயிட் பாரஸ்ட் கேக், பைனாப்பிள் கேக், ஸ்ட்ராபெரி கேக், சாக்கோ ட்ரிபிள், பிளாக் பாரஸ்ட் கேக், போன்ற 12 வகையான கேக்குகளை 80 கிராம், 400 கிராம் மற்றும் 800 கிராம் அளவுகளில் ரூ.70 முதல் ரூ.800 வரை விற்பனை செய்கிறது. இந்த கேக்குகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.