Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… 4 மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடல்!

கொரோனாவின் அச்சம் காரணமாக சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் கர்நாடகாவில் ஒரு முதியவர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவின் அச்சம் காரணமாக சத்தீஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சத்தீஸ்கரில் உள்ள அனைத்து பொது நூலகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், நகர்ப்புறங்களில் உள்ள நீர் பூங்காக்கள் மற்றும் ஆங்கன்வாடிஸ் ஆகியவை மார்ச் 31 வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் கால வரம்பின்றி பள்ளிகள் மூடப்படுவதாகவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில்  அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் மார்ச் 22 வரை மூடப்படும் என்றும், மார்ச் 22 ஆம் தேதி வரை நிலைமையை நாங்கள் மதிப்பாய்வு செய்து விடுமுறையை நீட்டிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்போம் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸுக்கு மொத்தம் 11 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் ஆக்ராவைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலா ஒருவர் நொய்டா மற்றும் லக்னோவைச் சேர்ந்தவர்கள் என்றார். கொரோனா அச்சம் காரணமாக கேரளா, கர்நாடகா, ஒடிஷா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

கொரோனவால் டெல்லியில் 7 பேர், கேரளாவில் 16 பேர்,  உத்தர பிரதேசம்  என மொத்தம் 74 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |