கொரோனாவின் எதிரொலியின் காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு ஒருநாள் போட்டிகளும் வருகின்ற 15 ஆம் தேதி லக்னோவிலும், 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுவதாக இருந்தது .
கொரோனாவின் எதிரொலியின் காரணமாக மேற்குவங்க மற்றும் உத்தரபிரதேச அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று நேற்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.