கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “twitter -இன் புதிய தனி உரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக மற்றவர்களின் நல வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்னும் அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் எலான் மஸ்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாக” கூறப்படுகிறது.
இந்த பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கியதன் மூலமாக ஊடக சுதந்திரத்தை பறிப்பதாக கூறி ட்விட்டர் நிறுவனத்திற்கு ஐ.நா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.நா-வின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணை பொது செயலாளர் மெலிசா பிளவ்மிங் கூறியதாவது, “ட்விட்டரில் பத்திரிக்கையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் மன உளைச்சலை தருகிறது. அதே சமயம் ஊடக சுதந்திரம் என்பது பொம்மை அல்ல.
சுதந்திரமான பத்திரிக்கை ஜனநாயக சமூகங்களின் அடித்தளமாகும். அது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவி” எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் வேரா ஜுரோவா கூறியதாவது, ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை twitter நிறுவனம் மதிக்க வேண்டும் எலான் மஸ்க் அதைப்பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் twitter நிறுவனம் தொடர்ந்து எல்லை மீறினால் ஐரோப்பாவின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.