நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வருடாந்திர பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து மின் உற்பத்தி சனிக்கிழமை காலை 8:30 மணி அளவில் மீண்டும் தொடங்கியது.
இதுவரையிலும் 180 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஒரிரு நாட்களில் முழுஉற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் உற்பத்தியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முதலாவது அணு உலையில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி சீரமைக்கப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.